articles

img

பகுத்தறிவுப் போராட்டத்தோடு இணைய வேண்டிய கொரோனா தடுப்பு இயக்கம்.....

“கோவிட் வீரர்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்கும் நன்றி” என்றொரு இணையத்தள நிகழ்வு ஜூன் 4 அன்று நடைபெற்றது. ‘மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம்’ சார்பில், மருத்துவர் எஸ்.காசி ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வழங்கிய நிறைவுரை இது.இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) தலைவர் மருத்துவர் ஜே.ஏ.ஜெயலால், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோரும் உரையாற்றினர்.

இன்றைய சூழலில் மிக அற்புதமான பணியாற்றிக்கொண்டிருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் செலுத்துகிறேன். அவர்களுக்கு என் சல்யூட். அவர்கள் கோவிட் போர்க்களத்தின் வீரர்கள் மட்டுமல்ல, தியாகிகள். இன்றளவும் அந்த முன்களப் பணியாளர்கள் தன்னலமற்ற சேவையாற்றி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்குக் காரணம்அபாயங்களை முன்னுணராத, எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருப்பதாகக் கருதிய அரசின், அதிகார வர்க்கத்தின் சுயமனநிறைவு மட்டுமல்ல. அதற்கும் அப்பாற்பட்ட பிரச்சனை இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வெற்றிகரமாக கோவிட் அலைப் பிரச்சனையை இந்தியா கையாண்டிருக்க முடியும், கொரோனா இரண்டாவது அலை பரவலைப் பெருமளவுக்குத் தடுத்திருக்க முடியும்.ஆனால் அவ்வாறு கையாளவிடாமல் தடுத்தது அந்தப் பிரச்சனைதான்.அது ஒரு வகை சிந்தனைப் போக்கு.அது ஒரு வகை மனநிலை. இனியும் கூட, அறிவியல்பூர்வமான அணுகுமுறை வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுமானால், தொடரும் பாதிப்புகளை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும், அடுத்த அலைகளைத் தடுக்கவும் முடியும்.

வைரஸ் பாகுபாடு பார்ப்பதில்லை, ஆனால்…
இந்த வைரஸ் மனிதர்களிடையே பாகுபாடு பார்ப்பதில்லை.பணக்காரர்களையும் தாக்குகிறது, பரம ஏழையையும் தாக்குகிறது.ஆனால், இங்குள்ள அமைப்புமுறைதான் இருவரையும் பிரித்துப் பார்க்கிறது.அதற்குஇரையாகிறவர்கள் யாரென்றால், மிகப்பெரும்பான்மையான ஏழை மக்கள்தான். எப்படியோ சமாளித்து உயிர்வாழ்கிறார்கள் என்றால் கூட, குடும்பங்களைக் காப்பாற்ற முடியுமா என்கிற அளவுக்கு அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது.
குடிமக்கள் இத்தகைய நெருக்கடியைச் சந்திக்கிறபோது இரண்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாக வேண்டும்.ஒன்று அனைவருக்கும் பொதுவான சுகாதார பராமரிப்பு சேவை. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது.சுகாதாரப் பராமரிப்புக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 3 சதவீதம் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்திருக்கிறோம்.ஆனால், கடந்த இருபது முப்பது ஆண்டுகளாகவே ஒரு சதவீதத்திற்கு மேல் ஒதுக்கப்பட்டதில்லை.

அனைவருக்கும் சமச்சீரான மருத்துவ சேவை என்பது ஒன்றும் நமது நாட்டில் நடைமுறை சாத்தியமற்றதல்ல. ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவமனைகள் வரையில் சரியான கட்டமைப்பு ஏற்கெனவே இருந்து வந்திருக்கிறது. ஆனால், இவையனைத்தும் திட்டமிட்ட முறையில்,வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டன.நாட்டின் சாபக்கேடாக தனியார் துறை வளர்க்கப்பட்டது.தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தங்களுடைய வழிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் உலக அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குமில்லை.

ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கூட, பெருந்தொற்றுப் பிரச்சனை தொடங்கியதுமே, அனைத்துத் தனியார் மருத்துவநிறுவனங்களும் அரசுடைமையாக்கப்பட்டன.இனி அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்படலாம்.ஆனால், அந்தமருத்துவ நிறுவனங்களின் அனைத்து வகையான சேவைகளும் மக்களுக்குக் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டது.ஆக, ஒரு பக்கம் பொதுமக்கள் தங்கள் வருவாயை மருத்துவத்திற்காகச் செலவிட்டாக வேண்டும் என்ற நிலைமையைத் தடுக்க வேண்டும்.இன்னொரு பக்கம் அவர்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.

தொடக்கத்திலிருந்தே, வருமான வரி பிரிவினர் அல்லாதஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 7,500 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டுமென்று கோரி இயக்கம் நடத்தி வந்திருக்கிறது.வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகளில் இவ்வாறு ரொக்க உதவி வழங்கப்படுகிறது.இது அந்தக் குடும்பங்கள் நெருக்கடியைச் சமாளித்து வாழ்வதற்கும் துணையாக இருக்கிறது, உள்நாட்டில் அன்றாடத் தேவைகள் அதிகரிப்பதற்கும் உதவுகிறது.உள்நாட்டுத் தேவைகள் அதிகரிப்பது அந்த நாடுகளின் பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்காமல் இருப்பதற்கு இட்டுச் செல்கிறது.

தானியங்கள் பாழாகிப்போனாலும்
இங்கே என்ன நிலைமை?அரசின் உணவுக் கிடங்குகளில் ஆயிரமாயிரம் டன் தானியங்கள் பாழாகிக்கொண்டிருக்கின்றன.அவற்றைப் பசித்திருப்போருக்கும் தேவைப்படுவோருக்கும் ஏன் வழங்கக்கூடாது?சென்ற ஆண்டு பிப்ரவரியிலிருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை வலியுறுத்தி பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்பி வந்திருக்கிறது.ஆனால் இன்று வரையில் இதைச் செயல்படுத்த மறுக்கிறார்கள்.இந்தியாவைக் காக்க வேண்டுமானால் இந்திய மக்களைக் காப்பாற்றியாக வேண்டும்.ஆகவே, அனைவருக்கும் சமச்சீரான மருத்துவ சேவையை உறுதிப்படுத்திட பொதுசுகாதாரத்தில் முதலீடு, மக்கள் தாக்குப்பிடித்து வாழ அவர்களுக்கு ரொக்க உதவி ஆகிய இந்த இரண்டும் அடிப்படையானவை.

இக்காலக்கட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் வேலையிழப்பு ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான்.அப்படியே நடந்திருக்கிறது.பல்வேறு முனைகளிலும் வேலையிழப்புகள் பற்றிய தகவல்கள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றன. சென்ற ஓராண்டில், தாங்கள் வேலை செய்துவந்த இடங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்கள் ஓரளவுக்காவது தாக்குப்பிடித்து வாழ முடிந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம்தான். இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் அரசு தனது கவனத்தைக் குவிக்க வேண்டும், ஆனால் கெடுவாய்ப்பாக அது நடக்கவில்லை.மாறாக, பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது அலையை முறியடித்துவிட்டோம் என்கிறார் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

கங்கைக் கரையில் மனித உடல்கள் எரிக்கப்படுகிற, நீரில் போடப்படுகிற காட்சிகள், முன்பு மக்களைத் தாக்கிய பிளேக் நோயின் கொடூரங்களை நினைவூட்டுகின்றன.பிளேக்துயரங்களைப் பேசுகிற இலக்கியங்கள் இந்தியில் வந்திருக்கின்றன. அரசின் செயலின்மை பற்றி எழுதினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைவைத்த பிரிட்டிஷ் ஆட்சியில், நிராலா என்ற புனைபெயரில் எழுதிய சூர்யகாந்த் திரிபாதி உள்ளிட்ட எழுத்தாளர்கள் அந்தக் காலத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். நிராலாவே தனது குடும்பத்தை பிளேக்குக்குப் பலிகொடுத்தவர்தான்.முதல் நாள் இரவு அவர் மடியில் படுத்து உறங்கிய மகள் மறுநாள் காலையில் உயிரோடு இல்லை. அதையெல்லாம் நினைவூட்டுகிற இன்றைய நிகழ்வுகளை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறபோது, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இரண்டாவது அலையை வென்றுவிட்டோம், மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.

ஹிட்லரின் பிரச்சாரச் செயலாளர் கோயபல்ஸ், ஒரு பொய்யை நிஜமாக்க வேண்டுமென்றால் அது பெரிய பொய்யாக இருக்க வேண்டும், அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும் என்று சொன்னது போல இருக்கிறது இது. ஊடகங்களுக்கான செய்தித்தலைப்புகளை உருவாக்கித் தருவதால் நிலைமை மாறிவிடாது.ஆனால் அதுதான் இப்போது நடக்கிறது.இன்று பிரதமர் மோடி, பரிசோதித்தல், தனிமைப்படுத்துதல், தொற்று ஏற்பட்டிருப்போரைத் தேடிக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் பற்றியெல்லாம் பேசுகிறார். இதை எதிர்க்கட்சிகள் 2020 மார்ச் மாதத்திலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றனவே! அதுபற்றி 22 கட்சிகள் சேர்ந்து பிரதமருக்கு எழுதின. எதுவும் நடக்கவில்லையே!

வளமான தடுப்பூசி பாரம்பரியம்
உலக நாடுகளின் பார்வையில் இந்தியா தனது நம்பகத்தன்மையை இழந்திருக்கிறது என்று ஆய்வாளர்களும் ஊடகங்களும் சொல்வது உண்மைதான் என்பதைக் காண்கிறோம்.இத்தகைய சூழலில்தான், இன்றைய பெருந்தொற்றிலிருந்து மீள வேண்டுமானால் இந்திய மக்கள் அனைவருக்கும் சமச்சீரான, இலவச தடுப்பூசித் திட்டம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம். சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கு இதில் வளமான பாரம்பரியம் இருக்கிறது.பெரியம்மை நோயால், உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. அனைவருக்கும் இலவச தடுப்பூசித்திட்டத்தால் அதை ஒழிக்க முடிந்தது.

 இளம்பிள்ளை வாதத்தைத் தடுப்பதற்கான போலியோ சொட்டு மருந்து இலவசமாகத்தான் வழங்கப்பட்டது, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை சொட்டுமருந்து முகாம்களுக்கு எடுத்துச்செல்லக் கேட்டுக்கொள்ளும் பரப்புரை இயக்கமே நடந்தது. இளம்பிள்ளை வாதம் தடுக்கப்பட்டது.இமயமலைக் கிராமங்களில் கூட தடுப்பூசி போட்ட அனுபவம் நமக்கு இருக்கிறது.பெருந்திரள் மக்களுக்கு நோய்த் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்வதற்கான அமைப்பு முறை, அதற்கான மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தும் நம்மிடம் இருக்கின்றன.நம்மால் முடியும்.

உற்பத்தியை முடுக்கிவிட...
தடுப்பூசி நிலவரம் பற்றிய உண்மைத் தகவல்களைத் தெரியப்படுத்த அரசு முன்வர வேண்டும்.சென்ற ஆண்டு பிரதமர், நம்மிடம் போதுமான தடுப்பூசி இருக்கும், உலகத்தையே நாம்தான் காப்பாற்றப் போகிறோம், அப்படி, இப்படி என்றெல்லாம் பேசினார்.இன்று நிலைமை என்ன என்று விளக்க வேண்டியதில்லை.எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.உலகின் எந்த மூலையில் தடுப்பூசி கிடைத்தாலும் கொள்முதல் செய்வதும்,அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதும் ஒன்றிய அரசின்தலையாய பொறுப்பு.இதுவரையில் இருந்து வந்துள்ள அரசுகள் அப்படித்தான் செயல்பட்டு வந்துள்ளன.இந்த அரசு அந்தப் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது, மாநிலங்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது.உள்நாட்டு உற்பத்தியும் முழுமையாக முடுக்கிவிடப்பட வேண்டும்.குறிப்பாக இதில் நம் பொதுத்துறை நிறுவனங்கள் மகத்தான பங்களிப்புச் செய்ய முடியும்.அதற்கான திறன்அவற்றிடம் உள்ளது.தமிழ்நாட்டிலும் அத்தகைய திறன்வாய்ந்த நிறுவனங்கள் உள்ளன.ஆனால் செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் பல ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டிருக்கிறது.தற்போது தமிழ்நாடு அரசு அதைத் தானே எடுத்து நடத்த முன்வந்திருக்கிறது.இவையெல்லாம் பயங்கர வேகத்தில் நடந்தாக வேண்டும்.

பகுத்தறிவை ஒதுக்குவது ஏன்?
அறிவியல் மனப்பான்மையற்ற அணுகுமுறைகள் ஆபத்தானவை.கும்பமேளா பற்றிய எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது.புனித கங்கை மீதான நம்பிக்கை எங்களைக் காப்பாற்றும் என்றார்கள்.அதே கங்கையில்தான் உடல்கள் மிதந்தன.மத நம்பிக்கையின் பெயரால் அறிவியலுக்கும், அலோபதி மருத்துவத்திற்கும் எதிரான கருத்துகளைபாபா ராம்தேவ் போன்றவர்கள் பரப்பினார்கள்.அறிவியலுக்கும் அறிவியல் மனப்பான்மைக்கும் எதிரான இந்தத் தாக்குதல்கள் மூடநம்பிக்கைகளைத்தான் வளர்க்கும்.மாட்டுச்சாண வைத்தியம், சிறுநீர் வைத்தியம் என்று பின்னோக்கித்தான் இழுத்துச் செல்லும்.அது மக்களுக்கான பாதுகாப்புக் கேடயத்தைக் கீழே போடுவதாகிவிடுகிறது.

ஆகவேதான் இது அரசின் செயலின்மைப் பிரச்சனை மட்டுமல்ல, அணுகுமுறைப் பிரச்சனையாகவும் இருக்கிறது. இந்த மனப்போக்குடன்தான் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.பகுத்தறிவை ஒதுக்கிவிட்டு பகுத்தறிவுக்கு எதிரானதை முன்னுக்குக் கொண்டுவருகிறது.எதற்காக என்றால், அவர்களுடைய இந்துத்துவா அரசியலை நிறுவுவதற்கு மக்கள் பகுத்தறிவோடு சிந்திப்பது தடையாக இருக்கிறது என்பதால்தான்.மூடத்தனங்களுக்கும் பிற்போக்குவாதங்களுக்கும் பகுத்தறிவு இடைஞ்சலாக இருக்கிறது.ஆகவே, அறிவை முடக்கிவிட்டு நம்பிக்கையே ஆதிக்கம் செலுத்த வைக்க முயல்கிறார்கள்.

பாதுகாக்கப்பட வேண்டிய பகுத்தறிவு
ஜெர்மனியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடிய தத்துவ மேதையான ஜார்ஜ் லூகாஸ் “பகுத்தறிவின் அழிவு” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.அறிவியல் கண்ணோட்டங்களில் மிகச்சிறந்து விளங்கியவர்கள் ஜெர்மானிய மக்கள். ஆனால் ஹிட்லரின் இனவெறிப்பிற்போக்குத்தனங்களால் அந்தப் பகுத்தறிவு எவ்வாறு அழிக்கப்பட்டது என்று விளக்கியிருக்கிறார் லூகாஸ்.அப்படிப்பட்ட, அறிவியல் மனப்பான்மைக்குப் பகையான சூழலில்தான் இன்று நமது நாடு இருக்கிறது.நம் மக்கள் தொகையில் கணிசமான இளையசக்தி நாட்டின் பரப்பெங்கும் பரவியிருக்கிற சாதகமான வாய்ப்புநமக்கு இருக்கிறது. அந்த சக்தியை முழுமையாகமுடுக்கிவிடுவதற்கு மாறாக அதனை வீணடித்துக்கொண்டிருக்கிறது தற்போதைய அமைப்பு முறை.அந்த இளையோர் ஆற்றல் விடுவிக்கப்படுவதும், அனைவருக்கும் பொதுவான சுகாதார சேவை, சமச்சீரான இலவச தடுப்பூசி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாக வேண்டும். இந்தமூன்றையும் எப்படி நாம் சாதிக்க முடியும் என்றால், பகுத்தறிவு மறுப்புக்கு எதிரான அறிவியல் மனப்பான்மைக்காக நடக்கிற போராட்டத்தில் நம்மையும் இணைத்துக்கொள்கிறபோதுதான். தடுப்பூசி பற்றிய தயக்கம் மக்களிடையே இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தத்தயக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த அறிவியல் மனப்பான்மையற்ற போக்குதான்.

அலோபதி மட்டுமல்ல, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அல்லது வேறு எந்த மருத்துவமுறையானாலும் முரணின்றி மக்களைக் காக்கும் சிகிச்சைக்குத் துணையாக இருக்க வேண்டும்.மாறாக, அறிவியல் முறையையே தாக்குவதாக இருக்கக்கூடாது, கெடுவாய்ப்பாக அதுதான் இப்போது நடக்கிறது.ராம் தேவ்கள் அதைத்தான் செய்கிறார்கள். சமூக நோய்த்தடுப்புத் திறனாகிய சமூக நோய் எதிர்ப்பு சக்தி வளர வேண்டுமானால் அதற்கு, பெருந்திரள் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டாக வேண்டும் என்ற புரிதலோடு இதை அணுகுவோம். மருத்துவ உலகத்தின் போராட்டம் மகத்தானது.அதேவேளையில் இது களத்தில் உள்ள மருத்துவர்களின் போராட்டம் மட்டுமல்ல, எதிர்க்குரல் எழுப்பும் அரசியல்வாதிகளின் போராட்டம் மட்டுமல்ல, இது நம்முடைய போராட்டம்.இந்தியாவின் போராட்டம்.இந்திய மக்களைக் காக்கிற போராட்டம். கொரோனா போராட்டத்திற்குப் பிறகும் கூட, அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மக்களைத் தாக்கிக்கொண்டிருக்கும்.அதை எதிர்த்தும் போராடுவோம்.

கட்டுரையாளர் : சீத்தாராம் யெச்சூரி

தமிழில் : அ.குமரேசன்

;